Friday, September 23, 2011

அம்மாவின் மறைவு


FRIDAY 16 SEPTEMBER 2011
தொப்புள்கொடி உறவு தொடர்பறுந்து தொலைதூரம் போனதம்மா!

 
 உலகின் உறவுகளில் உன்னதமான உறவு
  பெற்றெடுத்த தாய் என்றால் பெரிதும் சர்ச்சையில்லை.
உதிரம் கொடுத்தாய், உயிரும் கொடுத்தாய்
   பேணி வளர்த்தாய், பெரியவனானேன்.

உணவு ஊட்டும் உன்னத வேளைதனில்,விலகி ஓடினாலும்
    தந்தை இவர், தனயன் இவர் என்றெனக்கு உலகின்
உறவுகள் தெரிந்திட உணர்வையும் ஊட்டியே வளர்த்தாய்
     உன்னத மனிதனாய் உலகில் வலம் வர ஊக்குவித்தாய்
உறவை மட்டும் சொல்லித்தந்த நீ, பிரிவைச் சொல்லித்தரவோ
    உயிரைத்துறந்து உறவுகளை மறந்து தனியே சென்றாய்!

பாலூட்டிச் சீராட்டி பார்த்துப் பார்த்து வளர்த்த என் தாயே
    படுக்கையில் நீ வீழ்ந்தபோது பரிதவித்துத்தான் போனேன்.
பம்பரமாய்ச் சுழன்று  நீ வேலை பார்த்த வீட்டினிலே
    நிற்பதற்கும் நடப்பதற்கும் பிடிக்க ஒரு கம்பி தேவைப்பட்டதே!
பத்து பேருக்கு நாளும் அன்னமிட்ட உன் கைகளால்
  பசித்திட்ட வேளைதனில் எடுத்துண்ண இயலாமல் போனதேன்?
பாடாய்ப் படுத்திய நோய் உன்னை பச்சிளங்குழந்தையாக்கியதால்,
   பசி,தூக்கம், அன்னம் மறந்தாய், பாலைக் கொடுத்தோம்!

தூக்கம் தொலைத்தாய், துயரம் வளர்த்தோம், கொடுத்த மருந்தினில்
  துவண்ட உன் உடல் கண்டு வெறுத்தே விட்டது  எங்கள் வாழ்வு.
காசிக்குப் போனபோது என் தந்தை உனக்கு அணிவித்த 
  
கண்ணாடி வளையல் கடைசிவரை உன்னுடன் வந்ததே!
காலமெலாம் காப்பாற்றுவாய் என்றெண்ணிய எங்களை மட்டும்
 
கைவிட்டு செல்ல மனம் உனக்கு வந்ததேன்?
தாலாட்டி உறங்க வைத்த  தாயின் மடியே சொர்க்கமென்பேன் எனைச்
  சீராட்டி வளர்த்த உன் கைகள் சிறிதும் செயல்பட மறந்த போதும்
அமுதமொழி அருளிய உன் வாய்தனில் அரிசியிட்ட பொழுதினிலும்,
  அடுக்கி வைத்த சிதையினிலே அனலில் நீ வெந்தபோதும்
தொப்புள்கொடி உறவு  தொடர்பறுந்து தொலைதூரம் இன்று போனபோதும்
சொர்க்கமெல்லாம் சோகமாகி என் வாழ்வின் அர்த்தம் தொலைந்ததம்மா!

டிஸ்கி: 1)04.09.2011 நண்பகல் 12.30 மணியளவில்,எங்களையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு, இறைவனடி சேர்ந்த என் அன்னைக்கு அர்ப்பணம்.
                2) தகவலறிந்து, நேரிலும், செல்லிலும்,கமெண்டிலும், Google Buz மற்றும் FB யிலும்  இரங்கல் தெரிவித்த பதிவுலக சொந்தங்களுக்கு நன்றி.
                3) இயல்பு நிலை திரும்பியவுடன், பதிவுலகம் பக்கம் வருகிறேன்.